திங்கள், 9 ஜனவரி, 2012

ஜெனிவா மாநாட்டில் இலங்கையின் வெளிப்படைத்தன்மை குறித்து விளக்க முடியும்

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் அவசியமற்றவையாகும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சுயாதீனமானதாகவும் சர்வதேச நாடுகளில் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூறுவதாகவுமே அமைந்துள்ளன என்று மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ள உள்நாட்டு விசாரணைகள் தொடர்பாகவும் எடுத்துரைத்து இலங்கையின் வெளிப்படைத் தன்மை குறித்து விளக்க முடியுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் கூறுகையில்,

இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் அவசியம் என்று அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகள் பலவும் வலியுறுத்துகின்றன. இவற்றுக்கு பதிலளிக்கும் வகையிலேயே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான தேசிய ஆணைக்குழுவின் அறிக்கை அமைந்துள்ளது.

மிகவும் சுயாதீனமாகவும் சட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவுமே நல்லிணக்க ஆணைக் குழு கடந்த பல மாத காலமாக பொது மக்களிடமிருந்தும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்தும் சாட்சியங்களைப் பெற்றுக் கொண்டது.

நல்லிணக்க ஆணைக்குழு பல பரிந்துரைகளைக் கூறியுள்ளதுடன், யுத்த காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளுக்கும் வலியுறுத்தியுள்ளது. எனவே இலங்கை அரசின் வெளிப்படைத்தன்மை இன்று உலகிற்கு தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை பேரவையின் அமர்விலும் இலங்கையின் முன்னேற்றங்கள் தொடர்பாக வெளிப்படுத்த முடியும் எனக் கூறினார்.