ஜகதாபட்டினம் கடற்கரையில் அகதிகளாகச் சென்ற ஈழத் தமிழ்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்திருப்பது மனிதாபிமானமற்ற, கொடூரமான நடவடிக்கை என நாம் தமிழர் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிறு பிள்ளைகளுடன் உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு வந்தவர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய தமிழக காவல்துறையின் நடவடிக்கை நாகரீகமற்றது, இரக்கமற்றது என்பது மட்டுமின்றி, பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனங்களுக்கும் எதிரானதாகும்.
ஒரு வயது குழந்தை உட்பட மூன்று சிறுமிகளுடன் வந்திருங்கிய இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், அறந்தாங்கி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, வெவ்வேறு சிறைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டிருப்பட்டுள்ளனர் என்று செய்தியை கேட்டபோது நெஞ்சம் பதறுகிறது.
இலங்கையில் இன்றளவும் தொடரும் சிங்கள பெளத்த இனவெறி அரசின் கொடுமைகளுக்கு எதிராகப் போராடக் கூடத் தெம்பின்றி, சர்வதேசம் தலையிடாத காரணத்தினால் மெளன வலியுடன் எல்லா அடக்குமுறைகளையும் சகித்துக்கொண்டு நம் சொந்தங்கள் ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருக்கிறன.
சாப்பிட்டிற்கே வழியற்ற நிலையில், பாதுகாப்பி்ற்காகவும், பிழைக்க வழிதேடியும் தங்களின் இன்னொரு தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு அகதிகளாக வருவது கூட குற்றமாகுமா ?
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, உண்மையை அறிந்த பிறகும், அவர்களை ஏதாவது ஒரு அகதிகள் முகாமிற்கு கொண்டு சென்று மனிதாபிமான உதவிகளைச் செய்யாமல், நீதிமன்றத்தில் நிறுத்தி, குடும்பத்தினரைப் பிரித்து சிறையில் அடைக்கிறது தமிழக காவல்துறை என்றால், அது அகதிகளை கையாளும் பன்னாட்டுப் பிரகடனங்களை அவமதிக்கிறது என்றல்லவா பொருள்.
தமிழக காவல் துறையின் இந்த கொடூரமான, நாகரீகமற்ற நடவடிக்கையை தமிழக அரசு தடுத்தி நிறுத்தி, சிறையில் அடைக்கப்பட்ட நம் சொந்தங்கள் 8 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. அவர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால், நாம் தமிழர் கட்சி போராடும் என அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
