வியாழன், 2 பிப்ரவரி, 2012

பப்புவா நியூகினியாவில் படகு கவிழ்வு; 100க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

பப்புவா நியூகினியாவின் வடகரைக்கு அண்மித்த பகுதியில் 350 பயணிகளுடன் பயணித்த படகு இன்று வியாழக்கிழமை அதிகாலை வேளையில் கடலில் மூழ்கியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இருப்பினும் 200க்கும் மேற்பட்ட பயணிகளை காப்பாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலில் மூழ்கியவர்களை காப்பாற்றும் முகமாக 8 கப்பல்களும் 3 ஹெலிகொப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. உயிர் பாதுகாப்பு அங்கிகளை அணிந்தவாறு மக்கள் கடலில் நீந்திக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தேசிய கரையோரப் பாதுகாப்பு அதிகாரி கப்டன் நுர் ரஹ்மன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் 'பாரிய துக்கரமான சம்பவம்' என அவுஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார். குறித்த படகில் அவுஸ்திரேலியர்கள் எவராவது பயணித்திருந்தார்களா என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் அவசரமாக ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை என பப்புவா நியுகினி பிரதமர் பீற்றர் ஓ நெல்லி குறிப்பிட்டுள்ளார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு அவர் அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.