வியாழன், 2 பிப்ரவரி, 2012

எகிப்திய நாட்டு உதைபந்தாட்ட மைதானத்தில் கலவரம் : 74 பேர் பலி; 150 பேரின் நிலை கவலைக்கிடம்!

எகி்ப்திய நாட்டில் இடம்பெற்ற உதைபந்தாட்டப் போட்டியின் போது ஏற்பட்ட கலவரத்தில் 74 பேர் உயிரிழந்தனர். சுமார் 1000 பேர் படுகாயமடைந்தனர். 150 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன

எகிப்திலுள்ள சிட்டி ஒஃப் போர்ட் நகரில் உள்ள மைதானத்தில் உள்ளூர் உதைபந்து அணிகள் மோதிய போட்டி ஒன்று நடைபெற்றது. அல்அலி மற்றும் அல்மாஸ்ரி அணிகள் இந்தப் போட்டியில் மோதின.

இரு அணியின் ரசிகர்களும் பெருந்தொகையினராக மைதானத்தில் குழுமியிருந்தனர். போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை, ஓர் அணியைச் சேர்ந்த ஆதரவாரர்கள் திடீரென மைதானத்துக்குள் புகுந்து, மற்றத் தரப்பு அணி வீரர்களைத் தாக்கத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து மற்ற அணி ரசிகர்களும் மைதானத்தில் இறங்கி கைகலப்பில் ஈடுபட்டனர்.

ஜன நெரிசல், தாக்குதலில் அடைந்த காயம் என மைதானத்தில் 74 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். எகிப்தின் உதைபந்து வரலாற்றில் இது படுமோசமான, துயரமான சம்பவம் என அந்நாடு அறிவித்துள்ளது.