முப்படைகளின் முன்னாள் பிரதானி சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி இன்று (08) அலுத்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆர்பாட்டத்தில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றால் ஆர்பாட்டத்தை களைக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என கொழும்பு நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேல் மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு இன்று (08) சமர்பித்த அறிக்கை ஒன்றை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இவ்வாறு தீர்ப்பளித்தார்.
ஐனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் சரத் பொன்சேகாவின் விடுதலை வேண்டி, நீதிமன்ற வளாகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவ்வாறு செய்தால் நீதிமன்ற மற்றும் பொது மக்களின் நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்து குறிப்பிட்டுள்ளனர்.
ஆர்பாட்டத்தை அடக்க பொலிஸார் முற்படும்போது பொலிஸாருடன் முறுகலில் ஈடுபட ஆர்பாட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அறிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி, அவ்வாறான நிலை ஏற்படும்போது பொலிஸ் கட்டளைச் சட்டம் 95வது அத்தியாயத்தின் கீழ் ஆர்பாட்டத்தை களைக்க பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என தீர்ப்பளித்தார்.
