புதன், 1 பிப்ரவரி, 2012

இலங்கையின் இரும்பு அரசர்கள் இருவருக்கு கிழக்கில் சிலை திறப்பு

மயிக்கூச்செறியும் சாதனைகள் பலவற்றை இலங்கை மற்றும் வெளிநாடுகளில் நிகழ்த்தியதன் மூலம் உலக சாதனைகள் பல படைத்த பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ் மற்றும் கலாபூஷணம் சாண்டோ வே.தாஸ் ஆகியோரின் உருவச்சிலைகள் இன்று (01) காலை திறந்து வைக்கப்பட்டன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் தேசிய ஆலோசகருமான கே.தங்கேஸ்வரி, மட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் சம்மேளன தலைவர் கே.ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் சிலைகளைத் திறந்து வைத்தனர்.

பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ், சாண்டோ வே.தாஸ் நினைவு பணிமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் மன்ற செயலாளர் கலாபூஷணம் அன்புமணி இரா.நாகலிங்கம் ஆரையம்பதி பிரதேச சபை தலைவர் திருமதி மேரி கிருஷ்டினா சாந்தன், செங்கதிர் பிரதம ஆசிரியர் கே.கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

யானைகளை நெஞ்சின் மேல் ஏற்றுதல்; ஓடும் 36 உழவு இயந்திரங்களை மார்பின்மேல் ஏற்றுதல் உட்பட 50ற்கும் அதிகமான சாதனைகளை இவர்கள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.