இலங்கையின் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்க சென்ற இராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் தீவிலிருந்து நேற்று (31 செவ்வாய் கிழமை) 600க்கும் மேற்பட்ட படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர்.
வழக்கம் போல் கச்சத்தீவு கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற மீனவர்களை, நள்ளிரவில் வந்த இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
மீன் பிடிக்க சென்ற மீனவர்களில் பலர் தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலையில் மீன் பிடித்ததால் தான் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், இதனால் போதிய மீன்பாடு இல்லை என்றும் கரை திரும்பிய ஒற்றை மடி மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீனவ சங்க பிரதிநிதிகள் சிலர் கூறியதாவது, கடல் வளத்தை அழிக்கும் இரட்டை மடி வலையினால் மீன் பிடிக்கவும், கழிவு நீர் வழிய வாகனங்களில் மீன்களை ஏற்றிச் செல்லவும், தடை இருந்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால் மீன் வளம் அழிவதுடன் ஒற்றை மடி, கரை வலை, நாட்டுப்படகு மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுகிறது என்று கூறினார்கள்.
