இலங்கையில் மனித உரிமைகள் நிலைவரத்தை முன்னேற்றுவதற்கு தான் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தலைவர்களுக்கு விளக்குவதற்காக, ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்னர் அமெரிக்காவுக்கு தூதுக்குழுவொன்றை அனுப்ப வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்க எதிரனா தீர்மானத்தை அமெரிக்கா ஆதரிக்கும் அமெரிக்க அரசாங்கம் ஏற்கெனவே அறிவித்துள்ளது. அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சரை அமெரிக்காவுக்குவிஜயம் செய்து இலங்கை மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார்.
இவ்விடயம் குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து அமைச்சர் டியூ குணசேகர முதலில் கேள்வி எழுப்பினார்.
ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடருக்கு முன்னர் அமெரிக்காவுடன் இலங்கை கலந்துரையாட வேணடும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இக்கூட்டத்தில் கூறினார். நாம் மேற்கொண்ட நடவடிக்கைகள், எமது எதிர்கால திட்டங்கள் குறித்து அவரக்ளுக்கு விளக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
எனினும் தற்போதைய நிலையில் அமெரிக்காவுடன் இத்தகைய கலந்துரையாடல்களை நடத்துவது குறித்து வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ தயக்கம் தெரிவித்தார். இத்தகைய விஜயம் இடம்பெற்றாலும் இலங்கைக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அமெரிக்கா மாற்றிக்கொள்ளாது என அவர் கூறினார்.
அதேவேளை ஜனாதிபதியின் நிலைப்பாட்டை அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆதரித்துப் பேசினார். இந்தியாவின் ஆதரவையும் பெற்றுக்கொள்வது அவசியம் என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க வலியுறுத்தினார்.
