வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

'நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை ஜெனீவாவில் சமர்பிப்பது குறித்து அரசு தீர்மானிக்கவில்லை'

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு சமர்ப்பிப்பதா இல்லையா என்பது குறித்துஇன்னும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளளது.

இவ்வறிக்கை ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட மாட்டாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் கூறினார்.

எனினும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் அநுர பிரிய தர்ஷன யாப்பா இது தொடர்பாக கூறுகையில், இவ்விடயத்தில் அரசாங்கம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை என்றார்.

'இந்த அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை உலகம் அறியும். எனவே ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இதை சமர்பிப்பது அவசியமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது' என அவர் கூறினார்.

மாகாண சபைகளுக்கான காணி, பொலிஸ் அதிகாரிகள் குறித்து அவர் கூறுகையில், நாட்டில் எப்போதும் ஒரேயொரு பொலிஸ் சேவையே இருந்துள்ளது எனவும் காணி விடயத்தில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன எனவும் தெரிவித்தார்.

தேசிய பிரச்சினையில் இந்தியாவுடனான உறவு குறித்து அவர் கூறுகையில் இந்திய மத்திய அரசாங்கத்துடன் இலங்கை இரு தரப்பு உறவை பேணுவதால் மாநில அரசாங்கங்களுடனான உறவுகள் முக்கியத்துவமானவையல்ல என தெரிவித்தார்;.