ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாற்றில் காவலாளி சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு வயல் பிரதேசம் ஒன்றில் வேளாண்மை காவலில் ஈடுபட்டு வந்த ஒருவர் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விற்பனைமடுவில், பிரதேசத்தில் வயலில் வேளாண்மை காவலில் ஈடுபட்டு வந்த வந்தாறுமூலையைச் சேர்ந்த பி.வியஜயராசா (57 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வயல் காவல் வேலைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வந்தாறுமூமலையிலிருந்து சென்றிருந்த இவர், இன்றைய தினம் வீடு திரும்ப இருந்தார். வாரம் ஒருமுறை சென்று வரும் இவர் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.

நேற்றைய தினம் மாலை வயல் வாடிக்குச் சென்ற இவரது சகோதரன் மரணமடைந்துள்ளதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை நடத்திய பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வயல் பிரதேசங்களில் யானைகளின் அட்டகாசங்கள் காணப்படுகின்றமையும், வேறு மிருகங்களின் தொல்லைகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.