மாலைதீவின் புதிய அரசியல் நிலைமை காரணமாக அவதானத்துடன் செயற்படும்படி சுற்றுலாப் பயணிகள் கேட்கப்பட்டுள்ளனர்.
சில வாரங்களாக காணப்பட்ட அமைதி இன்மையைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த மொஹமட் நஸீட் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பதவியிலிருந்து விலகி உபஜனாதிபதியான மொஹமட் வாஹிட் ஹஸன் மனிக்கிடம் அதிகாரத்தை கையளித்தார். நிலை தற்போது சீராகத் தொடங்கியுள்ளது.
மாலைதீவில் தற்போது தங்கியுள்ள 200 ரஷ்ய சுற்றுலாப் பயணிகளும் பிரச்சினையின்றி இருப்பதாக இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதரகம் தெரிவித்தது.
பிரித்தானிய பொதுநலவாயம் மற்றும் வெளிவிவகார அமைச்சு, அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரியுள்ளது. அவுஸ்திரேலிய அரசாங்கம் என்பன தற்போதைய நிலைமையில் மாலைதீவுக்கான பயணத்தை மீளாய்வு செய்யும்படி தமது பிரஜைகளிடம் கேட்டுள்ளது.
பெப்ரவரி 6ஆம் 7ஆம் திகதிகளில் மாலைதீவில் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றன. இனிவரும் நாட்களில் மேலும் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெறலாம்.
பெப்ரவரி 7ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்ட மாலே விமான நிலையம் திறக்கப்பட்டு வழமை நிலைமைக்கு திரும்பியுள்ளது. எவ்வாறாயினும் மாலைதீவு செல்லவுள்ளோர் தமது பயண முகவர்களிடம் இருந்து அதிபிந்திய நிலைமையை அறிந்துகொள்வது நல்லது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
