வியாழன், 15 மார்ச், 2012

சட்டவிரோதமாக நீதி அமைச்சின் பெயர் பலகையை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நீதி அமைச்சின் பெயர் பலகையை சட்டவிரோதமான முறையில் வாகனங்களில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தற்போது வெளிநாடு சென்றுள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொலிஸ் மா அதிபர் என்.கே இளங்ககோனுக்கு அறிவித்துள்ளார்.
நீதி அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள அல்லது வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள வாகனங்களைத் தவிர பெயர் பலகையை முறைகேடாக பாவித்து வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் கோரியுள்ளார்.

இத்தகவலை நாடு முழுவதுமுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வழங்குமாறும் பொலிஸ் மா அதிபருக்கு நீதி அமைச்சர் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கண்டி மாவட்டத்தில் சில தனியார் வாகனங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகை காணப்படுவதாக தெரியவந்ததுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதி அமைச்சரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் நீதி அமைச்சின் பெயர் பலகையை சட்டவிரோதமான முறையில் பல தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதாக நீதி அமைச்சுக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.