செவ்வாய், 20 மார்ச், 2012

மட்டக்களப்பில் வழிப்பறிக் கொள்ளையர்கள் கைதாகி சிறையில்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மோட்டார் சைக்களில் சென்று வழிப்பறிகளில் ஈடுபட்டுவந்த குழுவினரை பொலிஸார் கைதுசெய்துள்ளர்.

அவர்களிடம் இருந்து தங்க நகைகள் உட்பட போலி கைத்துப்பாக்கி,கொள்ளைக்கு பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள் என்பனவற்றையும் கைப்பற்றியுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆரியரத்ன தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஆர்.மானவடுவின் வழிகாட்டலின் கீழ் பிரதிப்பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ஜி.ஏ.சி.ஆரியரட்ன தலைமையில் ஜ.அசேல, சாஜன் எஸ்.ஜயவீர,சாஜன் தங்கராசா ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் இந்த கொள்ளைக்குழுவை கைதுசெய்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை களுதாவளை, கனிஸ்ட வித்தியாலய வீதியில் பெண்னொருவரின் கழுத்தில் இருந்த மாலையை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டுசென்றுள்ளனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற உடனடி தகவலையடுத்து பிரதேசத்தில் இருந்து சோதனைச்சாவடிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது பெரியகல்லாறு சோதனைச்சாவடியில் வைத்து இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ச்சியாக அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது அவர்களால் பொதுமக்களிடம் இருந்து பறித்துச்செல்லப்பட்டிருந்த சுமார் 7.5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட கொள்ளையர்களில் நான்கு பேர் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் வளத்தாப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் கொள்ளையடித்த நகைகளை காரைதீவில் உள்ள வங்கிகளிலும் சாய்ந்தமருதில் இருந்த வங்கியிலும் வைப்புச்செய்திருந்த நிலையில் அவை மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் நேற்று திங்கட்கிழமை ஆஜர்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் கருணாகரன் உத்தரவிட்டார்.

அத்துடன் அன்றைய தினம் பாதிக்கப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்புக்கும் நீதவான் உத்தரவிட்டார்.