இலங்கைக்கு எதிரான தனது தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் பங்களிப்பை பெற்றுள்ளதாக கூறும் அமெரிக்கா, பொறுப்புடைமை விவகாரத்தில் இலங்கை நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறக்கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது இவ்வாரம் அமெரிக்காவின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராகுவதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கான அமெரிக்கத் தூதுவர் எய்லீன் டொனாஹோ கூறியுள்ளார்.
'இதுவெறுமனே ஒரு அடையாள வாக்கெடுப்பாக இருக்குமென நாம் எண்ணவில்லை. இது இலங்கை அரசாங்கம் நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஊக்குவிப்பதற்கான அர்த்தமுள்ள முயற்சியாகும்... இலங்கை அரசஙர்கம் அந்த நம்பகமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறிவிடக்கூடும் என நாம் அஞ்சுகிறோம்' என செவ்வியொன்றில் எய்லீன் டொனாஹோ தெரிவித்தார்.
இம்முயற்சியில் இலங்கை தனிமைபடுத்தப்பட்டு வருவதாக தென்படுகிறது. இத்தீர்மானத்திற்கு இந்தியா சார்பாக உள்ளதாக இலங்கையுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்ட நாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் திங்களன்று கூறினார்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தை எந்த கொள்கை தொடர்பாகவும் சட்டரீதியான நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தாது. எனினும் யுத்தத்தின் கடைசி மாதங்களில் . அரசாங்க சிப்பாய்களின் துஷ்பிரயோகங்களை மூடிமறைக்கக்கூடாதென இலங்கையை வலியுறுத்துவதற்கான ஒரு வழி இது என வாஷிங்டன் கருதுகிறது.மேற்படி காலப்பகுதியில் 40,000 பொதுமக்கள் பலியானதாக ஐ.நா. குழுவொன்று தெரிவித்துள்ளது.
