திங்கள், 19 மார்ச், 2012

பூந்தோட்ட நலன்புரி நிலையத்தில் பாடசாலையாக இயங்கிய கட்டிடம் தீக்கிரை

வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் முன்னர் பாடசாலையாக இயங்கிவந்த கட்டிடம் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை இரவு 7 மணியளவில் அப்பகுதியிலுள்ள கிணற்றில் நீராடச் சென்றவர்கள் கட்டிடம் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அயலவர்களை அழைத்து தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் அவர்களால் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாதுபோன நிலையில் பொலிஸாரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக வவுனியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

இக்கட்டிடம் முழுமையாக தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினார்.

இக்கட்டிடமானது 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து வந்த மாணவர்களின் பாடசாலையாக இயங்கிவந்திருந்தது. இக்கட்டிடத்தில் இயங்கி வந்த பாடசாலையை இந்த வருடத்துடன் மூடி அருகிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் இணைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது பூந்தோட்ட நலன்புரி நிலையத்தில் 155 குடும்பங்களே தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.