ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா முன்வைக்கும் இலங்கைக்கு எதிரான பிரேரணை குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுடன் கலந்துரையாடுமாறு ஜெனீவாவிலுள்ள தனது நிரந்தர பிரதிநிதியை இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாகவுள்ளதாக இந்திய பிரதமர் மன் மோகன் சிங் அறிவித்த நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் அமைச்சர் பீரிஸ் நேற்று காலை தொலைபேசி மூலம் கலந்துரையாடினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த கலந்துரையாடல் நீடித்தது.
உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இத்தகைய தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியேற்பட்டதாக அமைச்சர் பீரிஸிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்ததாக ஜெனீவாவிலுள்ள இலங்கை ராஜதந்திரி ஒருவர் கூறினார்.
இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா ஏற்கெனவே முன்வைத்த பிரேரணையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என ஜெனீவாவிலுள்ள இலங்கை ராஜதந்திர தூதுக்குழுவினர் கருதுகின்றனர்.
இப்பிரேரணை குறித்து இன்று புதன்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படவும் கூடும் என மற்றொரு இலங்கை ராஜதந்திர கூறினார்.
'எந்த நிலைக்கும் முகம்கொடுப்பதற்கு நாம் தயாராகிவருகிறோம். இந்தியாவின் நிலைப்பாடு துயரமானது. ஆதை எமக்கு சாதகமாக மாற்றும் என நம்புகிறோம்' என அவர் கூறினார்.
