செவ்வாய், 13 மார்ச், 2012

எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் வைத்திருப்பதற்கான கோரிக்கை வாபஸ்

பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வழக்கொன்றில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள எல்.ரீ.ரீ.ஈ. சந்தேக நபரை மீண்டும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் காவலில் வைக்க கோரிய மனுவை சட்டமா அதிபர் மேல்நீதிமன்றில் நேற்று விலக்கிக்கொண்டார். பிரதிவாதியின் வழக்குரைஞரின் ஆட்சேபத்தை தொடர்ந்து இந்த மனு வாபஸ் பெறப்பட்டது.

27 பி, சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளையில் வாழ்ந்த குற்றம் சாட்டப்பட்டுள்ளவரான தியாகராஜா மோகனரூபனை மீண்டும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்க வேண்டுமென கோரி மேல்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை சிரேஷ்ட அரச வழக்குரைஞர் ரியாஸ்பரி நேற்று விலக்கிக்கொண்டார்.

பிரதிவாதியின் சார்பில் சிரேஷ்ட வழக்குரைஞர் கே.பி. தவராசா ஆஜராகினார்.

குற்றஞ் சாட்டப்பட்ட மோகனரூபனை, 5018/9 இலக்க வழக்கு முடியும் வரை சிறையில் வைப்பது தேசிய பாதுகாப்புக்கும் பொது ஒழுங்குக்கும் அச்சுறுத்தலாகும் என கருதி சட்டமா அதிபர், பாதுகாப்பு செயலாளரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அரச புலானய்வு சேவைப்பற்றி எல்.ரீ.ரீ.ஈக்கு தகவல் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத புலனாய்வு மோகனரூபனை செப்டமட்பர் 14, 2007 இல் கைது செய்தனர்.

மார்ச் 9இல் வழக்கு விசாரிக்கப்படவிருந்த நிலையில் மார்ச் 1 ஆம் திகதி சந்தேகநபரை மீண்டும் புலனாய்வு பிரிவின் காவலில் பூஸா தடுப்பு முகாமில் வைக்க வேண்டுமென கோரும் மனுவை மேல் நீதிமன்றில் சட்டமா அதிபர் சமர்பித்தார்.

வழக்குரைஞர் தவராசா இதனை ஆட்சேபித்ததை தொடர்ந்து இந்த மனுவை வாபஸ் பெறுவதற்கு சட்டமா அதிபருக்கு, நீதிபதி சுனில் ராஜபக்ஷ அனுமதித்தார்.