காரைநகர் கசூரினா கடற்கரையில் தென் பகுதி மக்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலில் நீராடிக் கொண்டிருந்த தென்பகுதிப் பெண் ஒருவரிடம் அங்க சேஷ்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பொலிசாரினால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியளவில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் நீராடிக் கொண்டிருந்தனர். இதில் தென் பகுதியிலிருந்து வந்தவர்களும் அடங்குவர். இந்நிலையில் தென்பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணொருவரும் குடும்பத்துடன் நீராடிக்கொண்டிருந்த போது நீருக்கு கீழாகச் சென்ற இளைஞர்கள் அப்பெண்ணுடன் அங்கசேஷ்டையில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த அப்பெண் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு முறையிட்டார்.
இதனையடுத்து சிவில் உடையிலிருந்த பொலிசார் கடலுக்குள் பாய்ந்து சென்று சேஷ்டையில ஈடுபட்ட இரு இளைஞர்களையும் கடலுக்குள் வைத்து தாக்கியதுடன் அவர்களை கரைக்குக் கொண்டு வந்தும் தாக்கினர். பின்னர் அப்பகுதியில் இயங்கும் தற்காலிக பொலிஸ் நிலையத்தில் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்ட பின்னர் விடுவித்தனர்.
தற்போது கசூரினா கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இளைஞர்களின் தொல்லைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் பொலிஸார் சிவிலுடையில் கடமை புரிந்து வருகின்றனர்.
