அம்பாறை - நாவிதன்வெளி 5ஆம் கொலனி பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்திற்கு அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 61 பசு மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இம்மாடுகள் நேற்று மாலை சவளக்கடை வீதி பொலிஸ் சோதனை சாவடி பிரதேசத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கல்முனையைச் சேர்ந்த ஒருவரும், சவளக்கடையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மாடுகளையும் சந்தேகநபர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக மாடுகள் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
(அத தெரண நிருபர்)