தனது கையைப் பிடித்ததன் மூலம் பாலியல் தொந்தரவு செய்ததாகவும் தன்னை முச்சக்கர வாகனமொன்றுக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகவும் யுவதியொருவர் செய்த முறைப்பாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.பிரதிவாதியான இளைஞரின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் தீமனி பெத்தேவெல, காதல் கடிதங்கள் மற்றும் புகைப்படங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததுடன் தனது கட்சிக்காரர் நான்கு வருடங்களாக 17 வயதான மேற்படி யுவதியுடன் காதல் தொடர்புகொண்டிருந்ததாக கூறினார்.
தனது கட்சிக்காரர் இந்த யுவதியை சந்திப்பதற்காகவே வந்ததாகவும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நோக்கம் எதுவும் அவரிடம் இருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
இக்காதல் தொடர்பை முடிவுக்கு கொண்டுவரும் நோக்குடன் மேற்படி யுவதி இந்த முறைப்பாட்டை செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த இளைஞர் தண்டனைக்கோவையின் 345 ஆவது பிரிவின்படி தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றை புரிந்திருப்பதாக கொள்ளுபிட்டி பொலிஸார் தெரிவித்ததுடன் இச்சந்தேக நபரை ஓகஸ்ட் 3 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோரினர்.
இச்சந்தேக நபரை பிணையில் செல்வதற்கு நீதவான் கனிஷ்க விஜேரட்ன அனுமதித்தார்.