சனி, 14 ஜூலை, 2012

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ப்ருந்த கான லய கவின்கலைக்கூடம் அங்குரார்ப்பணம். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

மாவிட்டபுரத்தில் ப்ருந்த கான லய என்ற கவின்கலைக் கூடத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதெழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சம்பிராதய பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மாவிட்டபுரம் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் வீமன்காமம் மகாவித்தியாலயத்தில்  இடம்பெற்ற நிகழ்விலேயே இக்கலைக் கூடத்தின் செயற்பாடுகளை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். வீமன்காமம்  மகாவித்தியாலய மண்டபத்தில் அதன் பாடசாலை அதிபர் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற  நிகழ்வில் அதிபர் மற்றும் ப்ருந்த கான லய கூடத்தின் பொறுப்பாசிரியை வாத்திய வாணி திருமதி. கோகிலவதனி விஜயராகவன் ஆகியோர் உரையாற்றினர்.


மாவிட்டபுரத்தைச் சேர்ந்த அமரர் வித்துவான் உருத்திராபதி ஞாபகார்த்தமாக ப்ருந்த கான லய இசைக் கூடம் நிறுவப்பட்டு இயங்கி வரும் நிலையில் இன்றைய தினம் அவரின் மகளான அமரர் கலாபூசணம் திருமதி இராஜமணி சிங்கராஜாவினால் ஸ்தாபிக்கப்பட்ட வடபகுதி கலைக் கூடத்தினூடாக கலைச் சேவையை விஸ்தரிக்கும் நோக்கில் இக் கலைக்கூடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. வீமன்காமம் மகாவித்திலாயத்தில் இக்கவின் கலைக்கூடம் எதிர்காலத்தில் சொந்தக் காணியில் இயங்க உள்ளதுடன், இங்கு சங்கீதம், வீணை, வயலின், மென்ரலின் மற்றும் புல்லாங்குழல் ஆகிய கவின் கலைகள் இலவசமாக பயிற்றுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நிகழ்விற்கு வருகை தந்திருந்த பாடசலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பாகக் கேட்டறிந்து கொண்டார். இதன் பிரகாரம் மாணவர்களின் நலன்கருதி பேருந்து சேவைகளை வீமன்காமம் மகாவித்தியாலயம் வரை விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் அவர்கள் மக்களின் ஏனைய கோரிக்கைகளான மீள்குடியேற்றம், மின்சாரம் மற்றும் நிவாரணம் உள்ளிட்;ட விடயங்களில் துறைசார்ந்தோர் ஊடாக எதிர்வரும் 20ம் திகதிக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி வழங்கினார்.

இந்நிகழ்வின்போது கீரிமலை நகுலேஸ்வரக் குருக்கள், பிரதேச செயலர் ஸ்ரீ மோகனன், ஈ.பி.டி.பியின் வலி வடக்கு பிரதேச அமைப்பாளர் ஜெயபாலசிங்கம் (அன்பு), ஈ.பி.டி.பியின் வலி மேற்கு அமைப்பாளர் மகேந்திரம் (வள்ளுவன்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதனிடையே வருடாந்த உற்சவம் நடைபெற்று வரும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்குச் சென்ற அமைச்சர் அவர்கள்  பூசை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.