சனி, 14 ஜூலை, 2012

சிறந்த அடிப்படைக்கல்வியை சிறார்களுக்கு வழங்குவதன் மூலமே வளமானதொரு கல்விச்சமூகத்தை உருவாக்கமுடியும் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரீன்.(படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

சிறந்த அடிப்படைக்கல்வியை சிறார்களுக்கு வழங்குவதன் மூலமே வளமானதொரு கல்விச்சமூகத்தை உருவாக்கமுடியும் எனஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரீன் (உதயன்) தெரிவித்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கப்பம்புலம் பாரதி முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வு இன்றைய தினம் (14.07) பாரதி சனசமூக நிலையத் தலைவர் மெய்யழகன் தலைமையில் நடைபெற்ற போது இந்நிகழ்வின் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,  இப்பிரதேச வீதிப்புனரமைப்பு தொடர்பாக மக்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வீதிகள் எம்மால் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.  அவ்வாறே  இப்பிரதேச அபிவிருத்தி தொடர்பாகவும்  மிகுந்த  அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த கால யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை விரைவாக அபிவிருத்தி செய்வதுடன்,அனைத்தையும் இழந்து நிர்க்கதியான நிலையிலுள்ள எம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு சமூக நலத்திட்டங்களை கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் வழிநடத்தலில் நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

இதேவேளை முன்பள்ளிச் சமூகம் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க முன்பள்ளிக்கான மின்னிணைப்பினையும் விரைவில் பெற்றுத்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சிறார்களிற்கான பரிசில்களை பாராளுமன்ற உறுப்பினர் உதயன் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் வழங்கி வைத்தனர்.

இநநிகழ்வில் பனை அபிவிருத்தி சபைத் தலைவரும்,ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளருமான பசுபதி சீவரத்தினம் பனை,தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்க கொத்தணி பொது முகாமையாளர் சுதாகரன்,கிராம அலுவலர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.