வெள்ளி, 27 ஜூலை, 2012

முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம்களுக்கு செய்யும் துரோகம்: பைசால்

தொடர்ந்தும் முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து இருப்பது முஸ்லிம் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். தம்புள்ளையில் நடந்தது போலவே தாம்பகாம பிரதேசத்திலும் நடந்துள்ளது. பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய பொலிஸார் தமது கடமையை செய்யாது பேரினவாதத்திற்கு துணைபோனதுடன் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றி உள்ளனர் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் எம்.ஆர்.எம். பைசால் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், தற்போது இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் மற்றும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும் அவர்களது மதச் சுதந்திரத்தை பறிப்பதும் பேரினவாத நிகழ்ச்சி நிரலில் கட்டாயமான ஒன்றாகவே காணப்படுகிறது. இந்த நாட்டில் ஜனநாயக சுதந்திரத்தை மதச் சுதந்திரத்தை மதிக்கின்ற அனைவரும் ஓரணியில் திரண்டு மிலேச்சத்தனமான பேரினவாத சக்திகளுக்கு எதிராக செயற்பட முன்வரவேண்டும். நாம் பிரிந்து நிற்பதால் பேரினவாதிகளே பலம் பெறுவார்கள்.

முஸ்லிம்களது புனித காலமாகக் கருதப்படும் இந்நோன்பு காலத்தில் மதத் தலத்திற்குள் பிரவேசித்து வேறொரு மத அனுஷ்டானங்களை நடத்தி இருப்பது மன்னிக்கமுடியாத குற்றமாகும். இப்பாவச் செயலைப் புரிந்தவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்தி தண்டனை வழங்க வேண்டும்.

இதுபோன்ற நிந்தமான செயற்பாடுகள் உலகத்தில் வேறு எங்காவது நடந்து இருப்பதை நாம் அறியவில்லை. எனவே மத சுதந்திரத்திற்கு எதிரான இத்தகைய மோசமான செயற்பாட்டிற்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரளுமாறு அறைகூவல் விடுக்கிறோம் என்றார்.