புதன், 25 ஜூலை, 2012

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு துணைபோகும் விடுதி உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை.


சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு துணை போகும் விடுதிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான சுற்றறிக்கையொன்றை பிரதேசங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்க பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த சுற்றறிக்கைகளின் உள்ளடக்கங்களின்படி விடுதிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், ஊழியர்கள் தெளிவுபடுத்தப்படவுள்ளனர்.

அந்த தெளிவுபடுத்தல்களின் பின்னரும் மேற்படி துஷ்பிரயோகங்களில் ஈடுபடுவோருக்கு துணைபோகும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.