வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு: நியூ ஜெர்சி வணிக வளாக த்தில் 3 பேர் கொலை

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள வணிக வளாகத்தில் இன்று காலையில் புகுந்த மர்ம ஆசாமி, திடீரென அங்கிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுடத் தொடங்கினான். இதையடுத்து போலீசார் அந்த ஆசாமியை நோக்கி திருப்பிச் சுட்டனர். இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். சரமாரியாக தோட்டாக்கள் தாக்கியதில் சூப்பர் மாக்கெட் ஜன்னல்கள் உடைந்து நொறுங்கின.

இந்த சம்பவத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம ஆசாமி உள்ளிட்ட 3 பேர் இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் ஏராளமான போலீசார் சூப்பர் மார்க்கெட்டை சுற்றி நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவில் இதுபோன்று திடீர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கடந்த மாதம் 20ம் தேதி கொலராடோ தியேட்டரில் புகுந்த ஆசாமி 12 பேரை சுட்டுக்கொன்றான். இந்த மாதம் 5ம் தேதி விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள குருத்வாரா கோவிலில் நுழைந்த ஒரு நபர் 6 பேரை சுட்டுக்கொன்றான். சமீபத்தில் எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அருகில் 2 பேர் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதுபோன்ற சம்பவங்களால் பொதுமக்கள் வெளியில் செல்லவே பயப்படும் சூழ்நிலை உள்ளது.