புதன், 29 ஆகஸ்ட், 2012

அணிசேரா நாடுகளின் உச்சி மாநாடு நாளை ஈரானில் ஆரம்பம் ஜனாதிபதி மஹிந்த இன்று பயணம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (29) ஈரானுக்கு விஜயம் செய்கிறார். அணி சேரா அமைப்பின் 16 வது உச்சி மாநாடு நாளை 30 ஆம் திகதி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் முகமாகவே ஜனாதிபதி இன்று அந்நாட்டிற்கு பயணமாகின்றார்.

அணி சேரா உச்சி மாநாட்டில் ஜனாதிபதி அவர்கள் உரை நிகழ்த்தவுள்ளார். இதன் போது பல அரச தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை களிலும் ஈடுபடுவாரென ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. அணிசேரா இயக்கத்தில் தற்பொழுது 120 நாடுகள் அங்கம் வகிக்கின்ற அதே வேளை, 17 நாடுகள் அவதானிப்பு நாடுகளாக இருக்கின்றன.

பெல்கிறேட்டில் நடைபெற்ற முதலாவது அணி சேரா உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட இருபத்தைந்து நாடுகளில் இலங்கையும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அணி சேரா இயக்கத்தின் 5 வது உச்சி மாநாடு காலஞ் சென்ற பிரதம அமைச்சர் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் தலைமையில் 1976 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றது.  

இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் 50 பேர் கொண்ட குழுவொன்று ஈரான் செல்கிறது. இவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் இன்று ஈரான் பயணமாவதாகவும், இம்மாநாடு தொடர்பான ஏற்பாடுகளை கவனிக்கும் பொருட்டு பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா ஏற்கனவே ஈரான் சென்றிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.   அணி சேரா அமைப்பின் 16வது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமைச்சர்கள், வர்த்தக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் ஈரான் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.