புதன், 29 ஆகஸ்ட், 2012

இலங்கை - இந்திய இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு கொழும்பில் ஆரம்பம்

இலங்கை- இந்திய இராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்திலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று கொழும்பில் ஆரம்பமானது.  

கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் ஆரம்பமான இந்த உயர் மட்ட பேச்சுவார்த்தையில் இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.   இரு நாட்டு இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் அதிகாரிகள் மட்டத்திலான இந்தப் பேச்சுவார்த்தையின் முதலாவது சுற்று கடந்த ஆண்டு புது டில்லியில் நடைபெற்றது.

இரு நாட்டு இராணுவத்திற்கிடை யிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன. கொழும்பில் நேற்று ஆரம்பமான இந்த இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்திய இராணுவத்தின் சார்பில் இந்திய இராணுவத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் குருதீப் சிங், இலங்கை இராணுவத்தின் சார்பில் இலங்கை இராணுவத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்க ஆகியோர் தலைமை வகிக்கின்றனர்.

மேஜர் ஜெனரல் குருதீப் சிங் தலைமை யில் நான்கு இராணுவ உயர் அதிகாரிகள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு இலங்கை வந்துள்ளனர்.   இந்திய இராணுவத்தின் நடவடிக்கை களுக்கு பொறுப்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் ஹர்ஷ குப்தா, இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு பிரிவின் பணிப்பாளர் கேர்ணல் கஜன் தீப், இந்திய இராணுவ பயிற்சி பணிப்பாளர் கேர்ணல் விவேக் தியாகி ஆகியோரே இலங்கை வருகைத் தந்துள்ளனர்.   இதேவேளை மேற்படி நான்கு பேர் அடங்கிய இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழு நேற்று இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சந்திப்பு கொழும்பிலுள்ள இராணுவத் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.