புதன், 1 ஆகஸ்ட், 2012

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சூட்சுமமாக இயங்கிய விபசார விடுதி சுற்றிவளைப்பு

நான்கு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் கல்கிஸை பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் நான்கு பெண்கள் அடங்கலாக ஆறு பேரை கைது செய்துள்ளனர்.

கல்கிஸை தொகுதி குற்றத்தடுப்புப் பிரிவு விசேட பொலிஸ் குழுவொன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இரண்டு ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.


குறித்த பகுதியில் விபசார விடுதியொன்று செயற்பட்டு வருவதாக கல்கிஸை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவலொன்று கிடைத்துள்ளது. அதனடிப்படையில் சூட்சுமமாக மேற்கொண்ட விசாரணைகளின் பிரகாரம் அங்கு விபசாரம் இடம்பெறுவதை உறுதி செய்து கொண்ட பொலிஸார் நீதிமன்றத்தின் சோதனைக்கான அனுமதியினை பெற்றுக்கொண்டே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் மாலை 4.45 மணியளவிலேயே இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் போது அந்த விடுதியின் நடத்துனரான கல்கிஸை பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் அவருக்கு உதவிய மற்றுமொரு ஆணையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நான்கு பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண்கள், 30 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள் எனவும் அவர்கள் இங்கிரிய, நீர்கொழும்பு, கடவத்தை மற்றும் மீகொட ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுவதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸõர் மேற்கொண்டு வருகின்றனர்.