திங்கள், 3 செப்டம்பர், 2012

தேர்தல் வன்முறைகளுடன் தொடர்பு: இதுவரை 48 பேர் கைது 21,000 பொலிஸாரை தேர்தல் பணியில் ஈடுபடுத்த தீர்மானம்

தேர்தல் சட்ட விதிகளை மீறியதுடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளென அடையாளம் காணப்பட்ட 48 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண கூறினார்.

பல்வேறு முறைப்பாடுகள் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல்வேறு கோணங்களிலும் பலப்படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். மூன்று மாகாண சபை தேர்தல்களுக்குமென 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் தமது கடமை நிமித்தம் எதிர்வரும் 06 ஆம் திகதி குறித்த பிரதேசத்திற்கு சமுகமளிப்பர். அதனைத் தொடர்ந்து 07 ஆம் திகதி மாலை பொலிஸ் உத்தியோகத்தர்கள் வாக்குச் சாவடிகளில் தமது பாதுகாப்புக் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளனரெனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்தார்.   செப்டம்பர் 08 ஆம் திகதி தேர்தல் முடிவடைந்து, மறு நாள் தேர்தல் பெறுபேறுகள் வெளியாகும் வரை தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பரெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பாதுகாப்பின் நிமித்தம் ஆயுதந் தாங்கிய பொலிஸ் அதிகாரிகள் ஆகக் குறைந்தது மூவர்வீதம் நியமிக்கப்படுவர். மேலும் நான்கு வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் பாதுகாப்புச் சேவை வீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

மேலும் வாக்குப் பெட்டிகளை வாக்கு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லல் மற்றும் வாக்குகளை எண்ணுதல் போன்ற செயற்பாடுகளுக்கு பொலிஸ் அதிகாரிகளினால் பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென்பது உறுதியென்றும் அவர் கூறினார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண, இம்முறை மூன்று மாகாண சபைத் தேர்தலுக்கும் 21 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவிருப்பதாகவும் அதில் 123 பேர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளெனவும் 1,400 பேர் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களெனவும் 70 பேர் பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களெனவும் குறிப்பிட்டார்.