புதன், 5 செப்டம்பர், 2012

மரிச்சுக்கட்டு கிராமத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களின் வீடுகள் மீது தீ வைப்பு .

மன்னார், சிலாவத்துறை, மரிச்சுக்கட்டு கிராமத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் குடும்பங்களின் தற்காலிக வீடுகள் மீது நேற்று திங்கட்கிழமை இரவு இனந்தெரியாதோர் சிலர் தீ வைத்துள்ளனர்.

இதனால் 8 தற்காலிக வீடுகளும் சனசமூகநிலையமொன்றும் முற்றாக எரிந்துள்ளதுடன் மேலும் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

வாகனங்களில் வருகை தந்த சுமார் 70பேர் அடங்கிய குழுவினரே மேற்படி வீடுகள் மீது தீ வைத்துள்ளதாக மேற்படி மீள்குடியேற்ற மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன், மேற்படி கிராமத்தில் மீள்குடியேறிய குடும்பங்களில் சுமார் 15 குடும்ப உறுப்பினர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியில் இழுத்துத் தள்ளியுள்ள மேற்படி இனந்தெரியாதோர், அம்மக்களை குறித்த காணியிலிருந்து வெளியேறுமாறு கூறியதாக அம்மக்கள் குறிப்பிட்டனர்.

யுத்த காலத்தின் போது மேற்படி கிராமத்தில் சுமார் 150 முஸ்லிம் குடும்பங்கள் தங்கியிருந்த நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலை அடுத்து அவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் தங்கியிருந்துள்ளனர்.

பின்னர், யுத்தம் முடிவடைந்தவுடன் சுமார் 40 குடும்பங்கள் மீண்டும் அக்கிராமத்தில் மீள்குடியேறியிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதேசத்திலுள்ள மற்றுமொறு சனசமூக நிலையமொன்றில் தங்கியுள்ள அதேவேளை, அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை சிலாவத்துறை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

இந்த தீ வைப்புச் சம்பவம் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் கடற்படையினர் அதனை மறுத்துள்ளனர்.

எவ்வாறாயினும் இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாரும் சிலாவத்துறை பொலிஸாரும் இணைந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.