இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள பக்தர்களின் தரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்த புத்த பெருமானின் கபிலவஸ்து புனித தாது இன்று (12) மீண்டும் இந்தியாவுக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. கடந்த ஒகஸ்ட் 19 ஆம் திகதி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட கபிலவஸ்து புனித தாது நாட்டின் முக்கிய பிரதேசங்களில் வைக்கப்பட்டு நேற்றைய தினம் காலை 9 மணிக்கு களனி ரஜமஹா விஹாரைக்கு பவனியாக எடுத்து வரப்பட்டது. அங்கு இன்றைய தினம் காலை 7 மணி வரை பக்தர்களுக்கான தரிசனத்துக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
இதனையொட்டி களனி பிரதேசத்தில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. களனி பிரதேசத்தில் பல பாடசாலைகளுக்கு நேற்றும் இன்றும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. அத்துடன் களனி பிரதேச மதுசாலைகள் மூடப்பட்டு புனித தாதுக்கான கெளரவம் வழங்கப்பட்டிருந்தது.
நேற்றுக் காலை வரை கொழும்பு ஹுணுப்பிட்டி விஹாரையில் கண்காட்சிப்படுத்தப்பட்டிருந்த புனித தாதுவை தரிசிக்க இலட்சக்கணக்கான மக்கள் கடந்த இரண்டு தினங்களாக ஹுணுப்பிட்டி விஹாரைக்கு வருகை தந்திருந்தனர். நேற்றைய தினம் அங்கிருந்து விசேட பவனியாக புனித தாது களனி விஹாரைக்குக் கொண்டு வரப்பட்டது.
புனித தாது இன்றைய தினம் பிற்பகலில் விசேட விமானம் மூலம் மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
புத்த பெருமானின் புனித கபிலவஸ்து இம்மாதம் 4 ஆம் திகதி வரையே இலங்கையில் பக்தர்களின் தரிசனத்துக்கு வைக்கப்படவிருந்தது.
எனினும், இலங்கை அரசாங்கம் இந்திய அரசிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.