ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலங்கைத் தமிழர் விடிவிற்காக கருணாநிதியைத் தவிர வேறு யார் தூண்ட முடியும்?

தமிழீழ விடுதலைப் புலிகளை திமுக தனிப்பட்ட முறையில் ஆதரிக்கவில்லை. அதேபோல எங்களை விடுதலைப் புலிகளும் ஆதரிக்கவில்லை. திமுக கொடுத்த பணத்தைக் கூட வாங்காமல் எம்.ஜி.ஆரிடம் பணத்தை வாங்கியவர்கள் புலிகள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் கூறியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற டெசோ மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது,

இலங்கையில் போர் நடைபெற்ற போது, பொதுமக்கள் பலபேர் இந்தப் போரில் கொல்லப்படுகிறார்கள் என்று செய்தி வந்தது. அப்போது மக்கள் அழிக்கப்படுகிறார்கள் கொல்லப்படுகிறார்கள் என்று கூக்குரல் எழுப்புகிறார்கள்.
அப்போது இன்றைய முதல் அமைச்சர் ஜெயலலிதா எந்த நாட்டிலே போர் நடைபெறும்போதும் மக்கள் கொல்லப்படத்தான் செய்வார்கள் என்று சொன்னவர், இப்போது ஏதோ இந்தியாவில் இரு சிங்கள வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதாகவும், அந்த இரண்டு பேருக்கு பயிற்சி கொடுப்பதை நிறுத்தவில்லை என்றும் அறிக்கை கொடுக்கிறார். தமிழன் மொத்தமாக கொல்லப்படுகிறபோது, அது போரில் நடப்பது சகஜம் என்று சொன்னவர் ஜெயலலிதா.

இன்னும் ஒருபடி மேலே போய் சொன்னால் ஒரு பிரச்சனை வந்தபோது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக திமுக இருக்கிறது என்றார்கள். நாம் தனிப்பட்ட முறையிலே விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இல்லை. நாம் கொடுத்த 50,000 ரூபாய் பணத்தைக்கூட அவர்கள் வாங்கிக் கொள்ள மறுத்தார்கள். எம்ஜிஆரிடம் 4 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டார்கள். அப்படி விடுதலைப் புலிகளுக்கு நம்மிடத்திலே சின்ன மாறுபாடு.