ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலங்கை இராணுவத்திற்கு பயிற்சியளிக்கும் மத்தியரசு பாகிஸ்தான் இராணுவத்திற்கு பயிற்சியளிக்குமா?

பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும், மத்திய அரசு பயிற்சி அளிக்குமா என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கு, சார்க் உடன்படிக்கையை மத்திய அரசு காரணமாகக் கூறுவதற்கு இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் எந்தப் பகுதியிலும் இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை தலைமை தபால் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பழ.நெடுமாறன் பேசியது:
இலங்கை ராணுவத்தினருக்குப் பயிற்சி அளிப்பதை சார்க் நாடுகளின் உடன்படிக்கையைக் காரணமாகக் கூறுகின்றனர். அதே சார்க் அமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றொரு நாடான பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி அளிக்குமா என்ற கேள்வி எழுகிறது. இந்தியாவின் எதிரி நாடான பாகிஸ்தானுக்குப் பயிற்சி அளித்தால், நம் மீது நடத்தும் தாக்குதலுக்குத்தான் பயன்படுத்துவார்கள் என்பதால், அதை மறுத்து விடுவார்கள்.

அதேபோல, இலங்கைக்கு அளிக்கப்படும் ராணுவப் பயிற்சி, அங்குள்ள தமிழர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படும் என்பது தெரிந்தும் மத்திய அரசு பயிற்சி அளிப்பது கண்டனத்துக்குரியது. தமிழகத்தையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையிலேயே மத்திய அரசின் செயல்பாடு இருக்கிறது என்றார்.

(திணமணி)