திங்கள், 4 பிப்ரவரி, 2013

வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஒபாமா துப்பாக்கி சுடும் படத்தால் சர்ச்சை

 வாஷிங்டன் : வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள, அமெரிக்க அதிபர் ஒபாமா, துப்பாக்கியால் சுடுவது போன்ற படத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீப காலமாக, துப்பாக்கி சூடு சம்பவங்கள், தினசரி நிகழ்ச்சிகளாகி விட்டன. கடந்த டிசம்பர் மாதம், கனெக்டிகட் பகுதியில் உள்ள நியூ டவுனில், பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 26 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்துக்கு பிறகு, அமெரிக்காவில், பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு தடை விதிக்க ஆலோசனை நடந்தது. தேவையில்லாமல், துப்பாக்கி வைத்துக் கொள்ள தடை விதிக்கும் திட்டத்திற்கு, அதிபர் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார்.

இதற்கு, துப்பாக்கி ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. இந்நிலையில், வெள்ளை மாளிகை, நேற்று முன்தினம், ஒபாமா துப்பாக்கியால் சுடுவது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. களிமண்ணால் செய்யப்பட்ட புறா பொம்மையை, அவர் துப்பாக்கியால் சுடும் காட்சியால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. "துப்பாக்கியால் சுடுவது என் பொழுதுபோக்கு' என, ஒபாமா கூறியுள்ளார். ஆனால், அவர் துப்பாக்கி சுடும் குழுவில் உறுப்பினராக இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி வைத்துக் கொள்ள தடை விதிக்க திட்டமிட்டு வரும் சூழலில், ஒபாமாவின் இந்த துப்பாக்கி சுடும் போட்டோ, சர்ச்சையை கிளப்பியுள்ளது.