திங்கள், 4 பிப்ரவரி, 2013

ஈராக்கில் 160 பேரை கொன்ற அமெரிக்க, "மாஜி' வீரர் கொலை

வாஷிங்டன் : ஈராக்கில், நூற்றுக்கும் அதிகமான எதிரிகளை சுட்டு வீழ்த்திய, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரர் கிரிஸ் கெய்ல், சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பின், அங்கு நடந்த அரசியல் கலவரங்களைக் கட்டுப்படுத்த, அமெரிக்க தலைமையிலான பன்னாட்டு ராணுவத்தினர், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் முக்கியமானவர், கடற்படை வீரர் கிரிஸ் கெய்ல்.

இவர், ஈராக்கில், அமெரிக்க வீரர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களை வெற்றிகரமாக சமாளித்தார். அத்துடன், சிறிய வகை லாஞ்சர் மூலம், 160க்கும் மேற்பட்ட எதிரிகளை அழித்த பெருமையும் இவருக்கு உண்டு. "அமெரிக்கன் ஸ்னிப்பர்' என்ற புத்தகம் ஒன்றையும், கெய்ல் எழுதியுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள, கிளென் ரோஸ் பகுதியில் அமைந்துள்ள தங்கும் விடுதியில், கெய்ல் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவருடன், மற்றொரு நபரும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக, ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். "அமெரிக்கன் ஸ்னிப்பர்' என்ற புத்தகத்தை, கிரிஸ் கெய்லுடன் எழுதிய, ஸ்காட் மெக் ஈவன் இதுகுறித்து கூறியதாவது: ஈராக்கில், பலரது மரணத்திற்கு காரணமாக இருந்த கெயிலை, எப்படியும் தீர்த்துக் கட்டவேண்டும் என, பலரும் திட்டமிட்டனர். வீர தீர செயல்களுக்காக கெயிலுக்கு, இரண்டு முறை வெள்ளி பதக்கமும், ஐந்து முறை வெண்கலப் பதக்கமும் வழங்கி, அமெரிக்க அரசு கவுரவித்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.