திங்கள், 4 பிப்ரவரி, 2013

வடக்கு கிழக்கை இணைத்து அதிகார பகிர்வு அலகொன்றை அமைக்க முயற்சி: ஜே.வி.பி .

வடக்கு மற்றும் கிழக்கை இணைத்து அதிகார பகிர்வு அலகொன்றை அமைக்க ஒரு சர்வசன வாக்கெடுப்பை நடத்துமாறு இலங்கையை வலியுறுத்துவதற்காக சர்வதேச அமைப்புகள் தயாராகி வருவதாக ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாயம் போன்ற அமைப்புகளே இவ்வாறு தயாராகிவருவதாக ஜே.வி.பி தலைமையிலான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்களின் இயக்கம் தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து பிரித்து தமிழர் பக்கம் தள்ளிவிடுவதற்காகவே சர்வதேச நிறுவனங்கள் முஸ்லிம் உணர்வை தூண்டிவிடுகின்றன என அந்த இயக்கத்தின் ஏற்பாட்டாளர் வண. தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்காகவே இவ்வாறு திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் ஒன்றை கொண்டுவரவுள்ளதாலும் பொதுநலவாயம் இலங்கைக்கு எதிரான ஒரு நடவடிக்கைக்கு தயாரா வருவதாலும் இந்த நாடு ஒரு முக்கிய கட்டத்தில் உள்ளது.

இம்முறை கல்விப்பொதுத்தராதர உயர்த்தர பரீட்சை பெறுபேறுகள் முடிவுகளின் அடிப்படையில் 1,30,000பேர் பல்கலைகழகங்களுக்கு செல்வதற்கு தகுதிபெற்றுள்ளனர். இது வழமையை விடவும் கூடுதலான தொகையாகும்.

இதற்கு தக்க மாதிரியே பெறுபேறுகள் அமையுமாறு வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் 20000 பேருக்கு மட்டுமே இடமுண்டு. எனவே தனியார் பல்கலைக்கழகங்கள் அமைக்கவேண்டியது அவசியம் என பிரசாரம் செய்வதை இதன் நோக்கம் என அவர் கூறினார்.