ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

ரஜினியின் ரோபோவை பின்னுக்கு தள்ளிய கமலின் விஸ்வரூப்...!

Kamals vishwaroop chase rajinis Robo
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம், ரஜினியின் ரோபோ படத்தின் முதல்நாள் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 25ம் தேதியே தமிழகத்தில் விஸ்வரூபம் படம் ரிலீஸ் ஆகவேண்டியது.

ஆனால் முஸ்லிம் அமைப்புகளின் எதிர்ப்பால் இப்படம் தடைபட்டது. அதேசமயம் தமிழகம் மற்றும் புதுவை தவிர்த்து ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இப்படம் ரிலீஸ் ஆனது. முதல்நாளில் இம்மாநிலங்களில் சில பிரச்னைகள் வந்தபோதும், அடுத்தடுத்த நாட்களில் படம் தொடர்ந்து சுமூகமாக ஓடத் தொடங்கியது.

வடமாநிலங்களில் கடந்த வெள்ளியன்று (பிப்-1-ம் தேதி) இப்படம் விஸ்வரூப் என்ற பெயரில் இந்தியில் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் வடமாநிலங்களில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு எழுந்த பிரச்னைகள், இப்படத்தில் ‌என்னதான் இருக்கிறது என்று ரசிகர்களை படம் பார்க்க தூண்டியது. அதன்விளைவாக இப்படம் அங்கு நல்ல வசூலையும் பெற்றுள்ளது.

முதல்நாளில் விஸ்வரூபம் படம் ரூ.1.89 கோடி வசூலித்துள்ளது. தமிழ் படம் ஒன்று, மொழிமாற்றம் செய்யப்பட்டு இந்தளவு வசூல் ஈட்டுவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன் ரஜினியின் எந்திரன் படம் ரோபா என்ற பெயரில் இந்தியில் வெளியானது. இப்படம் முதல்நாளில் ரூ.1.75 கோடி வசூல் செய்து இருந்ததே முந்தைய வசூல் சாதனையாக இருந்தது. தற்போது அதனை கமலின் விஸ்வரூபம் படம் முறியடித்துள்ளது. இந்த வசூல் சாதனை முதல்நாள் வசூலை வைத்து மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.