செவ்வாய், 30 ஏப்ரல், 2013

இலங்கை கிரிக்கெட்டில் தமிழ் இளைஞர்களை இணைக்க வட, கிழக்கில் திறமை தேடல்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து இளம் கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் நோக்கில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திறமை தேடல் திட்டத்தை செயற்படுத்த முடிவு செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்யும் வகையில், அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில், இரண்டு நாள் கிரிக்கெட் பயிற்சி முகாமினை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடாத்தவுள்ளது.

இதில், 14 முதல் 19 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.

இது தொடர்பாக, கிரிக்கெட் பயிற்சியாளர்கள், பாடசாலை பொறுப்பாளர்கள் ஆகியோருக்கான நிகழ்ச்சிக்கும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து, மட்டக்களப்பிலும், இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இலங்கை கிரிக்கெட் அணி, 1981ல், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில், முழுநேர உறுப்பினரான பின், அந்த அணியில், தமிழ் பேசும் வீரர்கள் மிகக்குறைவாகவே இடம் பெற்று வந்தனர்.

இருப்பினும், இலங்கை கிரிக்கெட் அணியை, சர்வதேச அளவில், திறமையான அணி என்று உயர்த்திய பெருமை, தமிழ் பேசும் மலையக வீரரான முத்தையா முரளிதரன் மற்றும் ரசல் ஆர்னல்ட் ஆகியோரையே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.