செவ்வாய், 29 அக்டோபர், 2013

38291 வர்த்தக நிலையங்களில் திடீர் சோதனை!

நாடளாவிய ரீதியில் 38,291 வர்த்தக நிலையங்களில்  மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாவனைக்கு உதவாத உணவு வகைகளை விற்பனை செய்த 2,697 வியாபாரிகளுக்கு சிக்கினர்.

இந்த வியாபாரிகளுக்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்தது. உணவு பாதுகாப்பு வாரத்தின் போது நாடளாவிய ரீதியில் 38,291 வர்த்தக நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட தேடுதலில் பாவனைக்குதவாத பொருட்கள் விற்பனை செய்த 4887 வர்த்தக நிலையங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 2859 வர்த்தக நிலையங்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர் சங்க உப தலைவர் சி. எஸ். முதுகுட தெரிவித்தார்.

இதுவரை 1258 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டதோடு இவர்களிடமிருந்து 68 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா அபராதம் அறவிடப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அறிவுறுத்தல் கடிதம் வழங்கப்பட்ட வர்த்தக நிலையங்கள் குறிப்பிட்ட காலத்தினுள் தவறை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் தவறினால் வழக்கு தொடரப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.