சனி, 27 பிப்ரவரி, 2016

தேர்தலுக்கான அறிவிப்பு மார்ச் 30ஆம் திகதி இன்றேல் நாடுமுழுவதும் போராட்டம் - தினேஷ் எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வெளியிடத் தவறினால் பொதுமக்களை இணைத்து நாட்டிலுள்ள பிரதான வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
 
அட்டன் கினிகத்தேனை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரு மான தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

ஆயுட்காலம் நிறைவடைந்து. கலைக்கப்பட்டிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதியன்று வெளியிடுவதற்கு அரசாங்கம் தவறினால் அதற்கெதிராக பொதுமக்களை திரட்டி நாடுமுழுவதும் பிரதான வீதிகளை இடைமறித்து ஆர்ப்பாட்டங்களை நடத்த எதிர்பார்த்திருக்கின்றோம்.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என்ற வகையில் நல்லாட்சி அரசாங்கத்தினால் நாடாளு மன்றத்தில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்ற எத்தணிக்கும் சட்டமூலங்களையும், பிரேரணைகளையும் தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்.
 
இந்த நாட்டின் பொருளாதாரம் வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு தற்போது வீழ்ச்சியடைந்து கொண்டு செல்கின்றது என்றார்.
 
இதேவேளை இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிகாலத்தின் பின்னர் இந்த நாட்டில் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
 
ஒன்றிணைந்த எதிர்கட்சி இந்த நாட்டில் பாரிய புரட்சியை செய்து நல்லாட்சி அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.
 
அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறார் தினேஷ் குணவர்தன