செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தேசியம் என்ற பெயரில் கூட்டமைப்பினரால் நாம் நாளாந்தம் ஏமாற்றப் படுகின்றோம் - வலி கிழக்கு விவசாயிகள் ஆதங்கம்

தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் இப்போதும் எம்மை தொடர்ச் சியான துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கி வருகின்றார்கள் என்றும் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த போதிலும் அவர்கள் எம்மை ஏமாற்றி வருகின்றமையானது மிகுந்த வேதனையைத் தருகின்ற தெனவும் வலி. கிழக்கு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் விசனம் தெரிவித் துள்ளனர்.
 
 கோப்பாயில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (16) சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
 
 இதன்போது அறுவடை செய்யும் விவசாய உற்பத்திகளை சந்தைப்படுத்துவதில் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளையும் துன்பங்களையும் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு விவசாயப் பிரதிநிதிகள் தெளிவுபடுத்தியிருந்தனர். அத்துடன் உற்பத்திகளின் அறுவடைக் காலத்தில் குறித்த விளைபொருட்களை இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் அவற்றுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் அல்லது விளைபொருட்களின் இறக்குமதியைத் தடைசெய்ய வேண்டும்.
 
இதனூடாகவே விவசாயிகளாகிய நாம் உரிய பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த காலங்களில் தமிழ்த் தேசியம் பேசியவர்களால் நாம் எவ்வாறு ஏமாற்றப்பட்டோமோ அதேபோன்றுதான் இப்போதும் தமிழ்த் தேசியம் பேசுபவர்களால் நாம் தொடர்ச்சியாக மிகவும் துன்ப துயரங்களுக்கு உள்ளாகி வருகின்றோம்.
 
 அதுமட்டுமன்றி நடைமுறைக்குச்சாத்தியமாகாத அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை நம்பி அவர்களுக்கு வாக்களித்து அவர்களை வெற்றிபெறச் செய்த போதிலும் இன்று அவர்களினால் நாம் ஏமாற்றப்பட்டு வருகின்றமையானது மிகுந்த வேதனையைத் தருகின்றது. நாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகளை துன்ப துயரங்களை அவர்களின் கவனத்திற்கும் அரச அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும் பட்சத்திலும் கூட எமது பிரச்சினைகள் தொடர்பில் எவரேனும் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை.
 
 இங்கு அதிகமாக நடுகை செய்யப்படும் வாழைகள் அதிகளவில் அழிவுற்று எமக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்ட பொழுதிலும் அதற்கான இழப்பீடுகளைத் தருமாறு நாம் பலமுறை கோரிக்கைகள் விடுத்திருந்த போதிலும் இதுவரையில் எமக்கு எவ்விதமான இழப்பீடுகளோ உதவிகளோ கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் இதுவிடயம் தொடர்பில் வடக்கு மாகாண விவசாய அமைச்சு இதுவரையில் பாராமுகமாக இருப்பது எமக்கு மிகுந்த வேதனையைத் தருகின்றது என்றும் சுட்டிக்காட்டினர்.
 
 அத்துடன் வங்கிகள் ஊடாகப் பெறப்பட்ட கடன்களைக் கொண்டே விவசாய நடவடிக் கையில் ஈடுபட்டதாகவும் பயிர் அழிவுகள் ஏற்பட்டதன் காரணமாக தாம் கடனாளிகளாக்கப் பட்டுள்ள நிலையில் வங்கிகளில் பெறப்பட்ட கடனை நிறுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதுடன் மேலும் பல கோரிக்கைகளை விவசாயிகளும் மக்கள் பிரதிநிதிகளும் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் முன்வைத்தனர்.
 
விவசாயப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இதுவிடயம் தொடர்பில் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வினைப் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார். இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி. கிழக்கு பிரதேச இணைப்பாளர் இராமநாதன் ஐங்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்