செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

காணி, நிலங்கள் விடுவிக்கப்படுவது மாத்திமன்றி மக்கள் மீள் குடியேற அடிப்படை வசதிகளும் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

எமது மக்களுக்குச் சொந்தமான காணி, நிலங்களை பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிப்பது மட்டும் போதாது, மக்கள் மீள் குடியேறத் தக்க வகையில் அதற்குரிய அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளார். 
 
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், பல வருட காலமாக இடம் பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களிலும், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக வசித்துவரும் எமது மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக் குடியேறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்ற போதிலும், அதற்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இயலாத நிலையிலேயே இம் மக்கள் இருந்து வருகின்றனர்.
 
தங்களது அன்றாட வாழ்க்கைத் தேவைகளையே ஈட்டிக் கொள்ள இயலாத நிலையில், பொருளாதார ரீதியில் இம் மக்கள் கடந்த பல வருட காலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பாதுகாப்புப் படையினரிடமிருந்து விடுவிக்கப்படும் எமது மக்களின் காணி, நிலங்களில் எமது மக்கள் மீளக் குடியேறக்கூடிய வகையிலான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
 
அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல், மக்கள் மீளக் குடியேறுவதில் அக்கறை காட்டுவதில்லை எனக் கூற முடியாது. அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதன் மூலமே எமது மக்கள் அப் பகுதிகளில் பயன் பெறுவதற்கான இலக்கை அடைய முடியும். அவ்வாறின்றி, வெறுமனே எமது மக்களின் காணி, நிலங்களை விடுவிப்பது மட்டும் பயன்பாடாக அமையப் போவதில்லை என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.