சனி, 20 பிப்ரவரி, 2016

இலங்கையில் தமிழர் பகுதியில் வறுமை - பட்டினியால் மக்கள் அவதி: உலக வங்கி தகவல்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிக அளவில் வாழ்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்த அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தான் அமைதி நிலவுகிறது.
 
இந்த நிலையில் தற்போது அங்கு கடும் வறுமை நிலவுறது. வடக்கு மாகாணத்தில் மன்னர், முல்லைத் தீவு, மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இத்தகவலை உலக வங்கி தெரிவித்துள்ளது.

கிழக்கு பகுதியில் பட்டிகொலா, உவாமாகாணத்தின் பதுல்லா மாவட்டத்தில் எஸ்டேட் பகுதிகள், மத்திய மாகாணத்தில் நுவாரா எலியா போன்றவற்றையும் வறுமை தாக்கியுள்ளது.
 
இங்கு வாழும் பெரும்பாலான மக்கள் பட்டினியால் வாடுவதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 25 வயதுக்கு கீழ் உள்ள 47 சதவீதம் பேர் பட்டினி கிடக்கின்றனர். வேலையில்லா திண்டாட்டம், வேலைக்கு போதிய கூலி இன்மை போன்றவற்றால் அங்கு வறுமை தாண்டவமாடுகிறது.
 
குறிப்பாக இளைஞர்கள், படித்த பெண்கள் உள்ளிட்டோருக்கு வேலை கிடைப்பதில் கடும் சிரமம் உருவாகியுள்ளது.
 
எஸ்டேட் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சத்தான ஆரோக்கியமான உணவு இன்றி தவிக்கின்றனர். 5 வயதுக்கு கீழ் வாழும் 30 சதவீத குழந்தைகள் எடை குறைவாக உள்ளனர். எனவே, இக்குறைகளை தடுக்க உரிய நடவடிக்கை மேற் கொள்ளும்படி இலங்கை அரசை உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.