கட்சியின் கொள்கையையும் நிலைப்பாட்டையும் ஏற்றுக் கொண்டதன்
அடிப்படையில் தற்போது இளைய சமூகத்தினர் எமது கட்சியில் இணைந்து வருகின்றமை
எமக்கு மகிழ்ச்சியைத் தருகின்றதென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்
நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் இன்றைய தினம்
(19) இடம்பெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு
தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் நடைமுறை யதார்த்த
வழிமுறையிலான நீண்டகால எமது கொள்கையையும் நிலைப்பாட்டையும் இன்று வடக்குக்
கிழக்கு மட்டுமன்றி தென்னிலங்கை அரசியல்வாதிகளும் ஏற்றுக் கொண்டு வருகின்ற
நிலைமையே காணப்படுகின்றது.
இந்நிலையில் உண்மையைப் புரிந்து
கொண்டுள்ள மக்கள் அதன்வழி நடப்பதற்குத் தயாராகியுள்ளனர்.
அதனடிப்படையில்தான் எமது கட்சியில் இளைய சமூகத்தினர் சுயவிருப்பின் பேரில்
அதிகளவில் இணைவதில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.இதனொரு கட்டமாக
நேற்றைய தினம் வடமராட்சி சுப்பர்மடம் பகுதியில் ஒரு தொகுதி இளைஞர்கள் எமது
கட்சியில் அங்கத்தவர்களாக இணைந்து கொண்டுள்ளதையும் சுட்டிக்காட்ட
விரும்புகிறேன்.
எனவே எதிர்காலங்களிலும் இவ்வாறாக இளைய சமூகத்தினர்
எமது கட்சியில் இணைய இருப்பதாக அறிய முடிகின்ற நிலையில் அவர்களை இணைத்துக்
கொள்வதற்கும் வரவேற்பதற்கும் நாம் தயாராகவே இருக்கிறோம்.
இந்நிலையில் கடந்த காலங்களில் நாம் எவ்வாறாக மக்களுடன் நின்று மக்களுக்கான
சேவைகளை முன்னெடுத்தோமோ அவ்வேலைத்திட்டங்கள் எதிர்காலங்களில் மேலும்
பன்மடங்காக விரிவாக்கம் செய்யப்படல் வேண்டும். அதற்கு கட்சியின்
உறுப்பினர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனும் ஒன்றிணைந்து
உழைக்க வேண்டியது அவசியமானது.
இதனிடையே கட்சியின் தேசிய எழுச்சி
மாநாடு ஒன்றை நடாத்த வேண்டுமென கட்சியின் ஆதரவாளர்களும் புத்திஜீவிகளும்
கல்விமான்களும் கோரிக்கை விடுத்துவரும் நிலையில் இவ்வருட நடுப்பகுதியில்
இம்மாநாட்டை சிறப்புற நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.
எனவே
இம்மாநாட்டை காத்திரமாக நடாத்துவதற்கு கட்சி உறுப்பினர்களும் தமது
முழுமையான பங்களிப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்
என்றும் தெரிவித்தார்.
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட
நிதியாக இம்முறை எமக்கு ஒன்றரைக் கோடி ரூபாவே கிடைக்கப் பெற்றுள்ள நிலையில்
அந்நிதியினைக் கொண்டு வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்கள் பயன்பெறும்
வகையில் செலவிடப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றும்
சுட்டிக்காட்டினார்.


