இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் மேற் கொள்ளப் படும் விசாரணைகளுக்கு, சர்வதேச பொலிஸாரின் உதவியை பெற்றுக் கொள்ள இந்திய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
இந்த வியாபாரம் சர்வதேச அளவில் இடம்பெற்றதால், சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்று இந்த விசார ணைகளை முன்னெடுக்க, இந்தியாவின் ஆனந்த் மாவட்ட பொலிஸார் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பந்தோலி, மும்பாய் மற்றும் டெல்லி ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இந்த வர்த்தகத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களைக் கைதுசெய்வதே, இதன் நோக்கமாகும்.
இதன்படி இந்த விடயம் தொடர்பில் இந்தியாவின் மத்திய அரசுக்கு தெரியப்படுத்தி, சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, ஆனந்த் மாவட்ட பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தியாவின் பந்தோலி பகுதியில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட சிலரிடம் பணத்துக்கு சிறுநீரகங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாக அண்மையில் செய்திகள் வௌியாகின.
இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் மூவர் அண்மையில் இந்தியப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

