தமது பிரச்சினைகள் தொடர்பில் அரசானது உரிய
தீர்வினை முன்வைக்கும் வரை நாங்கள் எமது குடியிருப்பிலிருந்து
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளியேறப்போவது இல்லை என தொட்டலங்க
கஜுமா தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
வெறுமனே அரசியல் சுயநலன் கருதி எமது பிரச்சினைகளை அரசானது
கையாள்வதோடு மறுபுறம் எம்மை மீண்டும் குடியிருப்பிலிருந்து
அகற்றும் முயற்சியின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அரச
அதிகாரிகளினால் எமக்கு மரண அச்சுறுத்தல்களும் காணப்படுவதாக
விசனம் தெரிவிக்கின்றனர்.
தொட்டலங்க பிரதேசத்தில் உள்ள கஜுமா தோட்டத்தில்
அமைக்கப்பட்டிருந்த சில குடியிருப்புக்கள் சில சட்டவிரோதமானவை
என்ற காரணத்தின் அடிப்படையில் நகர அபிவிருத்தி அதிகார
சபையினரினால் கடந்த மாதம் பலத்த பொலிஸ் பாதுகாப்பின் மத்தியில்
வீடுகள் சில முற்று முழுவதுமாக அகற்றப்பட்டன.
அந்தவகையில் இதற்கு
எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக அன்றைய தினம் அப்பிரதேச மக்கள்
பாதைகளை மறைத்து எதிர்ப்பு நடவடிக்கையை வெளிப்படுத்தினர்.
இவ்வாறான நிலையில் அம்மக்கள் தொடர்ச்சியாக எதிர்நோக்கும்
பிரச்சினைகள் தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும்
ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் வியாழக்கிழமை வீடுகள்
அகற்றப்பட்ட தொட்டலங்க கஜுமா தோட்டத்தில் இடம்பெற்றது.
இதன் போது
கருத்து தெரிவிக்கையிலேயே குடியிருப்புக்கள்
அகற்றப்பட்டமையினால் பாதிக்கப்பட்ட அப்பிரதேசத்தை சேர்ந்த
காமினி சில்வா என்பவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாங்கள் கடந்த பல வருடங்களாக வாழ்ந்து வருகின்ற எங்கள்
குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை என குறிப்பிட்டு கடந்த மாதம் நகர
அபிவிருத்தி அதிகார சபையினர் எம்மை பலவந்தமான முறையில் எவ்வித
முன்னறிவித்தலுமின்றி வெளியேற்றியமையினால் நாம் அனைவரும்
ஒன்றிணைந்து பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுத்தோம்.
அந்த வகையில் இது தொடர்பில் எம்முடன் பேச்சுவார்த்தைகளை
முன்னெடுத்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அரசாங்கத்தினால் இது
தொடர்பில் ஆய்வொன்றை முன்னெடுத்து உரிய தீர்வை பெற்றுதருவதாக
தெரிவித்திருந்தார்.
ஆனால் இதுவரையில் அரச அதிகாரிகள் எமக்கு
எவ்வித அறிவித்தல்களையும் வழங்கவில்லை.மறுபுறம் எமது
பிரச்சினைகள் தொடர்பிலும் எவ்வித தீர்வுகளையும் முன்வைக்கவில்லை
என்றார்.