ஞாயிறு, 31 மே, 2020

அரசின் தொழில் சட்ட ஏற்பாடுகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

தொழில் நடைமுறைகள் தொடர்பில் அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் மற்றும் சட்ட நடைமுறைகளை அனைவரும் ஏற்று செயற்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய சட்ட வரையறைகளை மீற எவருக்கும் அனுமதி கிடையாது என்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் சுருக்கு வலை மீன்பிடியினால் சிறுதொழில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களால் ஏற்படுகின்ற பிரச்சனைகளுக்கு தொடர்பில் தீர்வு காண்பதற்கான ஆராய்வுக் கூட்டம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருமலை மாவட்டத்தின் உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் மாவட்டத்தின் 46 கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தத்தமது பிரச்சினைகள் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதன்போது திருமலை மாவட்டத்தில் சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பதற்கு ஒருதரப்பினர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பபு வெளியிட்டிருந்தனர்.

குறிப்பாக சுருக்குவலை தொழிலை முன்னெடுப்பவர்கள் அதற்காக கொடுக்கப்பட்ட வரையறைகளை மிறி செய்றபடுவதாகவும் இதனால் பலர் மீது வழக்குகள் கூட இருப்பதாகவும் சட்டிக்காட்டி அத்தொழிலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அத்தொழிலை முன்னெடுக்க ஒருதரப்பினர் தமது நியாயங்களை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் இருதரப்பினரது நியாயங்களையும் கேட்டறிந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்திற்கு மாவட்டம் தொழிலின் தன்மைகள் மாறுபட்டு இருக்கின்றது. சுருக்குவலை தொழிலுக்கான சட்டங்கள் நாடுமுழுவதும் ஒரேமாதிரியாக இருப்பதால் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றது. இதனால் இது தொடர்பில் மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடக் கூடிய சட்டவரையறைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இது தொடர்பான சட்டவரையறைகளை சீர்திருத்துவதற்கான பத்திரமொன்றை அமைச்சரவையில் தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவிருக்கின்றேன் என்பதுடன் அதுவரை அரசின் தொழில் சட்ட வரைமுறைகளை மீற எவருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது அமைச்சின் அதிகாரிகள் மற்றும் திருமலை மாவட்ட கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர், கடற்படையினர் துறைசார் அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.