திங்கள், 16 ஆகஸ்ட், 2010

இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்கு தீர்வு

தமிழக மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக இலங்கை அரசு 25 பிரதிநிதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளது. இதில் இலங்கை மீனவர் சங்க பிரதிநிதிகள் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை மீனவ பிரதிநிதிகள் கொண்ட இந்த குழுவினர், இன்று ராமேஸ்வரம் வந்து தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். 17, 18ஆம் தேதி களில் ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம், கடலூர் மீனவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.

பேச்சுவார்த்தையின் போது இந்திய, இலங்கை மீனவர்கள் மோதல் பிரச்சினைக்கு தீர்வு காண்பது, கடலில் எல்லை தாண்டும் பிரச்சினைகளை சமரசமாக தீர்ப்பது ஆகியவை குறித்து இருதரப்பு மீனவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

19, 20ஆம் தேதிகளில் இலங்கை மீனவ பிரதிநிதிகள் சென்னையில் மீன் வளத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இதன் மூலம் தமிழக, இலங்கை மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.