திங்கள், 6 செப்டம்பர், 2010

வாழைச்சேனையில் சட்டவிரோத மின்பாவனையில் ஈடுபட்டோர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு முதல் மேற்கொள்ளப்பட்டுவந்த சட்டவிரோத மின்சாரம் பெறுவோர் தொடர்பில் 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை மின்சாரசபையுடன் இணைந்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்த பொலிஸார் இது தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற பயன்படுத்தப்பட்ட பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்தனர்.

இவர்கள் தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று பிற்பகல் இவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.