ஹட்டன் பொகவந்தலாவை சென்மேரிஸ் கல்லூரியின் நிருவாகத்திற்கெதிராக கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒரு பகுதியினர் இன்று காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கல்லூரியின் பிரதான காரியாலயத்திற்கு முன்னால் இந்த கவனீர்ப்புப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்தக்கல்லூரியின் நிருவாக சீர்கேடுகளையும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளின் வீழ்ச்சியையும் ஊழல் மோசடிகளையும் சுட்டிக்காட்டியே இந்தக்க வனயீர்ப்புப் போராட்டம், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்தக் கல்லூரியின் மாணவர்கள் பலரும், இன்று காலை 8 மணிமுதல் காலை 9 மணிவரை வகுப்பறைக்குச் செல்லாது இருந்து விட்டு அதன்பின்பு வகுப்பறைக்குச் சென்றுள்ளனர். எனினும் மேலும் மாணவர்கள் பலர் கல்லூரியின் மைதானத்தில் கூடியுள்ளனர். இந்த நிலையில் கல்லூரியின் ஆசிரியர்கள் அனைவரும் காரியாலயத்துக்கு முன்னால் திரண்டு உள்ளதால் மாணவர்களின் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
சம்பவ இடத்திற்கு வருகைத்தந்துள்ள பொகவந்தலாவைப் பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ரெங்கராஜுவுக்கு அறிவிக்கப்பட்டதன் பின்பு கல்வி அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இந்தக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
